கிட்டப்பார்வைக்கு என்ன லென்ஸ்?

ஞாபக மறதி என்பது, எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான். அதனால் உங்கள் வீட்டுப்பிள்ளையும் அப்படி இருந்தால், பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. சிறுவயது விஷயங்களைப் படம்பிடித்தாற்போல நினைவுபடுத்திச் சொல்லி அசத்துபவர்களை, தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம். ஆனால் நேற்று நிகழ்ந்த ஒரு சம்பவத்தை, சிலருக்கு நினைவுபடுத்தினாலும்கூட ஞாபகம் வராது. ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது போலவே நினைவாற்றலைப் பெருக்கிக்கொள்ள, அதற்கான பயிற்சிகள் குழந்தைகளுக்குப் பெரிதும் துணை நிற்கும். ஒரு கதை சொல்லுவார்கள்.

ஒரு ஊரில் ஓர் இளைஞன், ‘‘தன்னுடைய பசுமாட்டை குழந்தையைத் தூக்குவதுபோல யாராவது தூக்க முடியுமா?’’ என்று சவால் விட்டான். அந்த ஊரில், யாராலும் அதைச் செய்ய முடியவில்லை. “எங்களைக் கேட்கிறாயே! உன்னால் தூக்க முடியுமா? நீ தூக்கினால், நாங்கள் பரிசு தருகிறோம்!” என்றனர் ஊர் மக்கள். அந்த இளைஞனும் தனது மாட்டைத் தூக்கிக்கொண்டு ஊரையே வலம் வந்தானாம்! ஊரில் எல்லோருக்கும் வியப்பான வியப்பு! “இவ்வளவு பெரிய மாட்டை எப்படி அநாயாசமாகத் தூக்கிக்கொண்டு நடக்கிறீர்கள்?” என்று கேள்விகளால் அவனைத் துளைத்து எடுத்தனர். “இந்த மாடு கன்றுக்குட்டியாக இருக்கும்போதிலிருந்து, தினமும் தூக்கி கொஞ்ச தூரம் நடப்பேன். அதனால், எனக்கு மாட்டின் எடை ஒருபோதும் சுமையாகத் தெரிந்ததில்லை. இப்படி, தினம் நடந்து நடந்து பழகிக்கொண்டேன். அவ்வளவுதான்!” என்றான் அந்த இளைஞன்.

குழந்தைகளின் ஞாபக சக்தி என்பதும் இப்படித்தான்! நினைவில் இருத்திக் கொள்வதற்கான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும். பலகாலமாக நம் முன்னோர், இதற்கான செயல்களை பல வழிகளில் கடைபிடித்து வருகின்றனர்.

‘மொட்டை உரு’ என்பார்களே! அப்படி வெறும் மனப்பாடம் செய்வதைவிட பாடங்களைப் புரிந்துகொண்டு படித்தால், அது என்றைக்கும் மறக்காது என்பது முன்னோர்களின் வழிகளில் ஒன்று. உதாரணமாக, கண்ணில் ஏற்படும் பார்வை குறைபாட்டுக்கு கண்ணாடி அணிவது வழக்கம். கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்று சொல்லப்படும் இக்குறைபாடுகளுக்கு குவி லென்ஸ், குழி லென்ஸ் என்ற லென்ஸ்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், எதற்கு எந்த லென்ஸ் அணியவேண்டும் என்பது நம்மில் பலருக்கும் நினைவில் இருப்பதில்லை. ஆனால், எல்லோரும் பள்ளிப்பருவத்திலேயே இதைப் படித்து, தேர்விலும்கூட எழுதி இருப்போம். ஆனால் நினைவில் இல்லாமல் போனதற்கு, நாம் அதை மனப்பாடம் செய்து படித்ததுதான் காரணமாக இருக்கும். இதற்கு இன்னது என்று மனப்பாடம் செய்வதைவிட உதாரணங்கள் மூலம் எளிமையாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டால், அவை என்றும் மறவாமல் இருக்கும்.

இதை எப்படி எளிமையாகச் சொல்லுவது என்று கேட்கிறீர்களா? ‘கிட்டக் குழி வெட்டி, தூரக் குவி’ என்று சொல்லுவார்கள். குழி வெட்டும்போது அதிலிருந்து கிடைக்கும் மணலை அருகிலேயே வைத்திருந்தால் மீண்டும் குழிக்குள் விழுந்துவிடும் என்பதால், தூரம் சென்று கொட்டு என்பதாகப் பொருள்படும் இவ்வார்த்தையின் பின்னால் ஒளிந்திருப்பது, கண் பார்வை குறைபாட்டிற்கு என்ன வகை லென்ஸ் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவியல் செய்தி! கிட்டப்பார்வைக்கு குழி லென்ஸும், தூரப்பார்வைக்கு குவி லென்ஸும் என்பதுதான் அந்தச் செய்தி!

பிள்ளைகளுக்குக் கற்பிக்கின்ற பாடங்களை, அவர்கள் புரிந்துகொள்கின்ற மாதிரி சொல்லிக்கொடுத்தால் எப்பவுமே மறந்து போகாது. மேலும், பாடங்களை வாய்விட்டுப் படிப்பது, புரிந்து படிப்பது, படித்தவற்றை எழுதிப் பார்ப்பது ஆகியவை மூலமும் நினைவில் நிறுத்தலாம். அவை ஒருபோதும் மறக்காது.

பள்ளிப்பிள்ளைகளுக்கு பாடம்தான் பிரச்சனை என்றில்லை, வீட்டில்கூட ஒரு பொருளை எடுத்துப் பயன்படுத்திவிட்டு, அதை வேறு ஒரு இடத்தில் வைத்துவிட்டு ஒருநாள் முழுக்க தேடிக்கொண்டிருப்பார்கள். குறிப்பாக, வார இறுதி நாட்களில் வீட்டுப்பாட நோட்டுப் புத்தகங்களை எங்கோ வைத்துவிட்டு, திங்கட்கிழமை காலை பள்ளி செல்லும் அவசரத்தில் வீடே அல்லோகல்லோலப்படும். “என் பென்சிலைப் பார்த்தியா?; கணக்கு நோட்டை இங்கேதானே வச்சேன்!; வாட்டர் கேன் மூடி எங்கே போச்சு?” என்று, வீட்டையே புரட்டிப் போட்டுக்கொண்டிருப்பார்கள்.

இதுபோன்ற பிரச்சனைகளை வேறு கோணத்தில் அணுகித் தீர்க்கலாம். நம் வீட்டில், டீவி ரிமோட் கன்ட்ரோலை குளியலறையில் வைப்போமா? மாட்டோம் இல்லையா! அதேபோல, குழந்தைகளுக்கு, அந்தந்தப் பொருட்களை அங்கங்குதான் வைக்க வேண்டும் என்ற ஒழுங்கைக் கொண்டு வந்துவிட வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘இரவு 8 மணிக்கு வீட்டுப்பாடங்களை முடித்துவிட வேண்டும்; 8.05-க்கு பென்சில்களை சீவி வைத்துவிட வேண்டும்; 8.10-க்குள் பள்ளிக்குக் கொண்டுசெல்லும் பையில் பென்சில், பேனா, நோட்டுப் புத்தகங்களை வைத்துவிட வேண்டும்’ என்றெல்லாம் சுயமாகவே விதிகளை உருவாக்கி வைத்துவிட்டால், அந்த ஒழுங்குக்கு குழந்தைகளும் பழகிவிடுவர். நினைவாற்றல் பிரச்சனையும் எழ வாய்ப்பில்லை.

“மறதி என்பது, பயிற்சியினால் சரிசெய்யக் கூடியதுதான்” என்கிறார், மாணவ உளவியல் நிபுணரான திருமதி. நளினி சந்திரசேகரன். “மறதி என்பது, எல்லோருக்கும் பொதுவானதுதான். முதலில், ஞாபகக் குறைபாடு இருக்கும் எந்தப் பிள்ளையையும், அவர்களின் குறையைச் சொல்லி இழிவுபடுத்தக் கூடாது. இது மாணவர்களை அதிகம் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்றால், பெற்றோர் தினமும் சண்டை சச்சரவுடன் இருக்கக் கூடாது. குழந்தைகளைச்சுற்றி எப்போதும் அமைதியான நல்ல சூழல் இருக்கவேண்டும். எதையுமே அவர்கள் புரிந்துகொண்டு உள்வாங்கினால் மட்டுமே, என்றைக்குமே நினைவில் இருக்கும். இல்லாவிட்டால், விருப்பமின்றி பெறும் தகவல்களாக உள்ளே போகும். அதுவும் சில நாட்களில், மறந்தும் போய்விடும்.

ஞாபகங்களில் தடுமாறும் பிள்ளைகளுக்கு, பாடங்களைப் பகுதி பகுதியாகப் பிரித்து படிக்கச் சொல்லித்தர வேண்டும். மொத்தமாக சுமை ஏற்றக் கூடாது. அவர்களுக்கு  எதுவுமே புரியாமல் போய்விடும். புரியாததை ஏன் நினைவில் கொள்ளப் போகிறார்கள்?

அடுத்ததாக, உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது. நினைவாற்றலை வளர்க்க பாதாம் பருப்பு, பேரிச்சை மற்றும் உலர் பழங்கள் கொடுக்கலாம். கீரை வகைகளையும் சேர்த்துக்கொள்வது பயன் தரும். இன்னொரு முக்கியமான விஷயம். ஞாபக மறதி இருப்பவர்களுக்கு, அதைச் சரி செய்வதற்கான சிறப்புப் பயிற்சிகள் இருக்கின்றன. மருத்துவர்களைக் கலந்தாலோசித்தால் அவர்கள் வழிகாட்டுவார்கள்” என்கிறார் நளினி.

இரண்டு பத்து ரூபாயை பிள்ளை கையில் கொடுத்து, முட்டையும் பாலும் வாங்கிவரச் சொல்லுகிறீர்கள். கடை வரைக்கும் சென்றுவிட்டு, “எந்தப் பத்து ரூபாய்க்கு பால்?; எந்தப் பத்து ரூபாய்க்கு முட்டை?” என்று பையன் திரும்பி வந்தால், கோபப்படாமல் அணுகுங்கள். அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

உணவில் சில டிப்ஸ்

  • மிளகை எடுத்து நன்றாக இடித்துப் பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால், மறதி குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.
  • தினமும் பப்பாளி, மாதுளம்பழம் சாப்பிடுவதும் ஞாபக சக்தி பெருக உதவும்.
  • பீர்க்கங்காய் வேரை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், மூளை பலம் பெறுவதுடன் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
  • பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நினைவாற்றல் கூடும்.
  • செம்பருத்திப் பூவில் உள்ள மகரந்தக் காம்பை நீக்கிவிட்டு சாப்பிட, நினைவாற்றல் அதிகரிக்கும்.
  • முளைக் கீரை, வல்லாரைக் கீரை ஆகியவை நினைவாற்றலுக்கு நல்லவை. .
  • துளசி இலை நான்கினை எடுத்து தினசரி சாப்பிட, நினைவாற்றல் அதிகரிக்கும்.
  • தூதுவளைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும், ஞாபகசக்தி பெருகும்.
  • ————————————-

(செல்லமே ஜூன்2015)


Comments

2 responses to “கிட்டப்பார்வைக்கு என்ன லென்ஸ்?”

  1. harinivas Avatar
    harinivas

    நல்ல கட்டுரை நாம் எல்லோரும் படிக்க வேண்டியது , நான் உங்கள் கட்டுரையை வாட்ஸ் அப் ல் பகிரலாமா ?

    1. பதிவின் பெயருடன் பகிருங்கள். நாலுபேருக்கு நல்லதுன்ன்னா செய்யல்லாம். 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *