புதிய அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்துக்கொள்ளுவதற்கு முன் மெடிக்கல் செக்கப் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அவர்களே ஒரு இடத்தையும் பிக்ஸ் செய்து, ஒரு கடிதத்தை கொடுத்து டெஸ்ட் பண்ணிட்டு மட்டும் வந்துடுங்க என்றும் சொல்லி விட்டார்கள். அதில் கொடுமை என்னவென்றால்.. வெறும் வயிற்றுடன் காலை 7.30 மணிக்கு ஸ்கேன் செண்டரில் இருக்கவேண்டும் என்ற உத்தரவு வேறு. தரமணியில் இருந்து அதிகாலையிலேயே எழுந்து தயாராகி, ஒரு வழியாக கடிதத்துடன் ஸ்கேன் செண்டர் போய் சேர்ந்தேன். அங்கே என்னோடு பணிக்கு சேர இருப்பவர்கள் சிலரும் காத்திருந்தார்கள்.

முதலில் ரத்தன் எடுத்தார்கள். (நான்கு சிறிய பாட்டிலில்) அதன் பின் சிறுநீர் சேகரிக்க ஒரு சின்ன பிளாஷ்டிக் டப்பா.. அதையும் முடித்து கொடுத்தாச்சு. அடுத்து EEGன்னு என்னமோ, ‘ஹலோமேன்’சினிமாவில் வருவது போல.. நெஞ்சில், கையில் காலில் என்று பல இடங்களில் பசை மாதிரி என்னமோ தடவி, எதையோ ஒட்டி விட்டார்கள். சில நிமிடங்களில் அது முடிந்தது. இதய பரிசோதனை என்று சொன்னார் அந்த சகோதரி. அதன் பின் எக்ஸ்ரே.. சட்டை,பனியன் என்று மேல் ஆடைகளை கழட்டி எக்ஸ்ரே! அதன் பின் ஒரு டாக்டரின் சோதனை.. இங்க தான் காமடியே ஆரம்பமாச்சு..!

”ஒங்க பேரு..?” கம்பெனி சார்பில் வந்திருப்பவன் என்பதால்.. இளக்காரமாகப் பார்த்தார் அவர்.

பதில் சொன்னேன்.

”இதுக்கு முன்னாடி எங்க வேலை பார்த்தீங்க?’

சொன்னேன்.

“ம்… ஏன் வேலையை விட்டு வந்தீங்க..?”

கொஞ்சம் எரிச்சலாக பதில் சொன்னேன். (இத எல்லாம் ஏன் இவரு கேக்குறாரு என்ற எண்ணம் )

”எந்த வருடம் பொறந்தீங்க?”

”கல்யாணம் ஆகிடுச்சா?”

“ஏன் இன்னும் பண்ணிக்கலை?”

முதல் ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன். அடுத்த கேள்வி இன்னும் எரிச்சலை ஏற்படுத்த.., “ ஒரு பொண்ணும் கிடைக்கல சார்.. ஒங்களுக்கு தெரிஞ்ச யாரவது இருந்தா.. சொல்லுங்களேன்”ன்னு நான் சொன்னதும் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தார். எடை,உயரம், காது, மூக்கு, வாய் என்று லைட் அடித்து பார்த்து குறித்துக்கொண்டார்.

”கண்ணாடி ஏன் போட்டு இருக்கீங்க?”

‘தூரத்துல இருக்குறது சரியா தெரியாது’

”ஓ..சரி.. கண்ணாடியை கழட்டுங்க” என்று சொல்லி விட்டு, அறையின் மூலையில் இருந்த கண்சோதனை போர்டை காட்டி,(பாக்ஸ் வடிவில் உள்ளே பல்ப் எரிந்துகொண்டிருந்தது) ”அதுல கடைசி வரியை வாசிங்க?” என்றார். எனக்கு சரியான கோபம் வந்தது. தூரத்தில் உள்ளதை சரியாக பார்க்க முடியாது என்று சொல்லியும் இப்படி அடம்பிடிக்குதே இது… “சார்.. கொஞ்சம் எழுந்திருங்க..” அவரும் எழுதார். அந்த பாக்ஸை கொஞ்சம் பக்கத்துல இழுத்துட்டு வாங்க.. படிக்கிறேன் என்றேன்.

”என்னங்க இப்படி சொல்லுறீங்க..”

”பின்ன என்னங்க.. தூரத்துல இருக்குறது சரியா தெரியாதுன்னு சொல்லித் தான் கண்ணாடியே போட்டிருக்கேன். அதையும் கழட்டச் சொல்லி, கடைசி வரியை படின்னா.. எப்படி படிக்கிறது.. ?” கொஞ்ச காட்டமகவே என் குரல் ஒளித்தது. அவ்வளவு தான்.. கூல்.. கூல் சார்.. எல்லாம் ஓகே நீங்க நார்மலா இருக்கீங்க… போய்ட்டு வாங்க.. என்று கை கூப்பி அறையைவிட்டு வெளியே அனுப்பி வைத்தார். என்ன கொடுமைடா சாமி.. என்ற நொந்த படியே வெளியே வந்துவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்துத் தான் நான் அங்கே நடந்துகொண்ட விதமும், பயந்து போன டாக்டரின் நிலையும் நினைத்து சிரிப்பு வந்தது.

-OoO-

எரிபொருள் விலை ஏற்றத்தினை கண்டித்து இடதுசாரிகள் தமிழக்கத்தில் வரும் 7ம் தேதி பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்திருக்கின்றன. மத்திய அரசின் விலை ஏற்ற.. அறிவுப்பை எதிர்பார்த்து.. சரக்கு இல்லை என்று போர்டு மாட்டி வைத்திருந்த பெட்ரோல் பங்குகள் எல்லாம்.. மாலையில் வழக்கம் போல.. பெட்ரோல், டீசல் விநியோகிக்கத் தொடங்கின. இவனுங்க.. இப்படி பதுக்கி வைச்சு வியாபரம் செய்வது.. அரசுக்கு தெரியாமலா போகும்? என்ன பண்றது.. விலைவாசி எல்லா பொருட்களின் மீதும் ஏறி உட்கார்ந்து இருக்கிறது. ஐந்தாவது வருடத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் ஆட்சி அடுத்த முறை வரக்கூடாது என்று முடிவெடுத்து.. நிதியமைச்சர் நடந்துகொள்கிறாரோன்னு கூட தோணுது. பா.ஜ.க காரங்க நிச்சயம்.. பா. சிதம்பரத்துக்கு நன்றி சொல்லி கிட்டு இருப்பாங்க!

-OoO-

நானும், நண்பரும் ஒரு வண்டி, அவருடைய நண்பர் இன்னொரு வண்டி. ஒரு வண்டியில் அண்ணா சாலை நோக்கி் போய்க்கொண்டிருந்தோம். என் நண்பர் தலைக் கவசம் போட்டிருந்தார். அவருடைய நண்பரோ.. தலைக்கவசம் இல்லாமல்.. வண்டியோட்டி வருகிறார்.

வேலைச்சேரியில் இருந்து கிளம்பிய எங்களை, நந்தனம் சிக்னல் தாண்டி ஒரு போக்குவரத்து போலீசார் மடக்கினார். வண்டியை ஓரம் கட்டச்சொன்னார். ஓரம் கட்டி நின்றோம். அங்கு ஏற்கனவே ஏழு பேர் நின்று கொண்டிருந்தார்கள். எங்களை நிற்கச்சொன்ன போலீஸ்காரரோ.. வேறு வண்டி எதையாவதை மடக்கி விடுவோம் என்ற ஆர்வத்தில் சாலையையே பார்த்துக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருந்தோம். பொறுமை இழந்து அவரிடம் போய்’ எதுக்கு சார் நிப்பாட்டி வச்சு இருக்கீங்க’ என்று கேட்டோம்.

‘ஹெல்மட் போடாம போகக்கூடாதுன்னு தெரியாது. அதுக்கு பைன் போடத்தான்’ என்றார்.

‘‘சரி சார்.. பைன் போடுங்க.. கட்டிட்டு போரோம். எங்களுக்கு வேற வேலை இருக்கு”

‘அதெல்லாம் நான் செய்ய முடியாது. அய்யா (உயர் அதிகாரி) தான் வரணும்’ என்றார்.

”என்ன சார்.. இப்படி பதில் சொன்னா எப்படி..? எங்களுக்கு வேற வேலை இருக்குல்ல..!”

‘ம்.. சட்டம்னா.. எல்லாருக்கும் ஒண்ணு தாங்க.. இதன பேரு நிக்குறாங்கல்ல.. வெயிட் பண்ணுங்க!’ என்று குரலில் கொஞ்சம் கோபத்தைக் காட்டினார்.

“சார்… எஆங்க பண்ணினது தப்பு. பைன் கட்டுறோம்ன்னு சொல்லியாச்சு.. அப்புறமும் லேட் பண்ணினா.. எப்படீங்க?”

அவருக்கு இன்னும் கோபம் கூடி இருக்க வேண்டும். சட்டம், நிதீ என்றெல்லாம் பேசத்தொடங்கினார்.

“சார்.. சட்டம்னா.. எல்லோருக்கும் ஒண்ணூ தானங்க..”

‘ஆமா’

“நாங்க வேலைச்சேரியில இருந்து வாரோம். இதுவரை எட்டு சிக்னல் கிராஸ் பண்ணிட்டு வந்திருக்கோம். அங்க எல்லாம் இருந்த போலீஸ் காரங்க என்னைய ஏன் பிடிக்கலை…? அவங்களுக்கு எல்லாம் ஜெல்மட் போடாமப் போறது தப்புன்னு தெரியலையா..?”

எங்கள் கேள்வி அவரை கொஞ்சம் குழப்பி இருக்க வேண்டும். தலையைச் சொறிந்தபடி யோசிச்சார். அப்புறம் சுதாரிச்சுகிட்டு, ‘அதெல்லாம் எனக்கு தெரியாது, அய்யா வந்ததும் கேட்டுக்குங்க!’eஎன்று சொன்னார்.

“எங்களுக்கும் தெரியாது சார்.. அவங்க ஏன் எங்களை பிடிக்கல..? அப்ப.. அங்க இருக்குற போலிஸ்காரங்களுக்கு இது தப்புன்னு தெரியலையா? இப்ப எங்க கூட வந்து அந்த சிக்னல்ல இருந்த போலிஸ்காரங்களையும் பிடிக்கிறதா இருந்தாத் தான் பைன் கட்டுவேன்”

கொஞ்ச நேரம் யோசிச்சார். பின் காதருகில் வந்து சார் நீங்க பிரஸ்ஸா? என்று கேட்க, நாங்களும் ஆமாம் என்று தலையசைக்க.. ‘சாரி சார்.. நீங்க கெளம்புங்க’

அது எப்படி கிளம்புறது.. அப்ப இவங்க எல்லாம்.. சார் நீங்க எங்க இருந்து வாரீங்க..?

மடிப்பாக்கம்,

நீங்க..

கிண்டி

நீங்க… என்று எல்லோரின் ஏரியாவையும் விசாரிச்சுக்கிட்டு இருக்கும் போதே.. அந்த போலீஸ் காரர்.. ஓடி வந்து..,

”சார், எல்லோரையும் வேணும்னா.. அனுப்பி விட்டுடுறேன்’ என்று பரிதாபமாக கெஞ்ச.. எல்லோரையும்.. அனுப்பி விட்டு நாங்க எங்க வழியில் கிளம்பினோம். 🙂

-oOo-

1992-ல் தமிழ் இலக்கிய உலகை திரும்பி பார்க்க வைத்த நூல் ‘கருக்கு’. எழுதியவர் பாமா. தமிழில் தலித் எழுத்தை தனித்த அடையாளத்துடன் எடுத்துச்சென்ற எழுத்தாளர். இது இவரது முதல் நூல். அதுமட்டுமல்லாது.. இது அவரது வாழ்க்கை வரலாறு. கன்னிகாஸ்திரியாக மாற.. விரும்பி, அதற்காக.. தன் வாழ்கையை மடாலயத்தில் ஒப்படைத்தவர். ஆனால்.. அங்கு நிகழும் அடக்குமுறை பற்றி.. பேசிய நூல். அதற்கு பின்.. அவர் எழுதிய நூல் “சங்கரி” இந்த இரண்டு நூல்களையும் ஒன்றாக்கி.. மின்னூலாக தந்திருக்கிறார்கள்.

”கருக்கு”+ “சங்கதி” ஆகிய இரண்டு நூல்களும் மின்னூல் வடிவத்தில் இதோ. நன்றி:- ஊடறு

(நான் கொடுக்கும் மின்னூல்கள் அனுமதி பெற்று வலை ஏற்றப்பட்டிருப்பவையே!)
-OoO-


Comments

21 responses to “விடுபட்டவை 4 ஜூன் 2008”

  1. PARAMA PITHA Avatar
    PARAMA PITHA

    //நீங்க… என்று எல்லோரின் ஏரியaாவையும் விசாரிச்சுக்கிட்டு இருக்கும் போதே.. அந்த போலீஸ் காரர்.. ஓடி வந்து.. ”சார், எல்லோரையும் வேணும்னா.. அனுப்பி விட்டுடுறேன்’ என்று பரிதாபமாக கெஞ்ச.. எல்லோரையும்.. அனுப்பி விட்டு நாங்க எங்க வழியில் கிளம்பினோம்///

    this is against law. and you are boasting it proudly.. it is a trend not to respect rules nowadays. kalikaalam

    Params

  2. எழுத்து பிழைகளை சரி பண்ணுங்க முதலிலே…… 🙂

    //உங்க கொண்டை இது தானே?!
    220.226.75.51//

    ஹைய்யா…. இல்ல…. இது இல்ல….. :))

  3. Press அப்படிங்கிற ஒரு தகுதி இருந்தா காவல்துறை பயப்படுது, நீங்களும் தைரியமா பேச முடியுது. எங்கள மாதிரி பொது ஜனம்னா ஜடம் மாதிரிதானே பார்க்குறாங்க..அப்புறம் எங்கே பேச.. 🙁 உங்கள மாதிரி நான் பேசி இருந்தா என்ன ஆகியிருக்கும்??

  4. :))

    புதிய வேலைக்கு வாழ்த்துக்கள் தல…

    மின்னூல் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள என்போன்றோர்க்கு மிகப்பயனுள்ள இணைப்புகள் நன்றி 🙂

  5. /////Press அப்படிங்கிற ஒரு தகுதி இருந்தா காவல்துறை பயப்படுது, நீங்களும் தைரியமா பேச முடியுது. எங்கள மாதிரி பொது ஜனம்னா ஜடம் மாதிரிதானே பார்க்குறாங்க..அப்புறம் எங்கே பேச.. 🙁 உங்கள மாதிரி நான் பேசி இருந்தா என்ன ஆகியிருக்கும்??/////

    உண்மைதன் பாலாபாய். இந்த அவலம் இந்தியாவில் மட்டும்தான்!

  6. //அடுத்து EEGன்னு என்னமோ, ‘ஹலோமேன்’சினிமாவில் வருவது போல.. நெஞ்சில், கையில் காலில் என்று பல இடங்களில் பசை மாதிரி என்னமோ தடவி, எதையோ ஒட்டி விட்டார்கள்.//

    தலைவரே

    நெஞ்சில், கையில், காலில் ஒட்டி எடுப்பது ECG – Electro Cardio Gram
    தலையில் மட்டும் ஒட்டி எடுப்பது – EEG – Electro Encephalo Gram

    அப்ப EGG ??? – நாம் ஆம்லெட் ஆப்பாயில் எல்லாம் போட்டு சாப்பிடுரோமே, அது தான் 🙂 🙂 🙂 🙂

  7. நல்ல வேலை செஞ்சீங்க பாலா.அந்தப் போலிஸிடமிருந்து சக பொதுஜனங்களையும் காப்பாத்தியதைத்தான் சொல்றேன்.அன்னிக்கு எல்லோரும் உங்களுக்கு மனசுக்குள்ள நன்றி தெரிவிச்சிருப்பாங்க. 🙂

    சில டாக்டருங்க அப்படித்தான்.சில சமயம் ரொம்பக் கேவலமாக் கூட நடந்துப்பாங்க..என்ன பண்றது?

    பாமா நாவலை ரொம்ப காலமாத் தேடிட்டிருந்தேன்..படிக்கத் தந்தமைக்கு நன்றி நண்பரே 🙂

  8. உங்கள் மருத்துவ பரிசோதனையின் போது மருத்துவர் நடந்துக்கொண்டவிதம்………அர்த்தமற்ற கேள்விகள் அனைத்தும் உங்களை எரிச்சல் அடைய வைத்ததில் ஆச்சரியமொன்றுமில்லை, இப்படியும் மருத்துவர்கள் இருக்கிறார்களே…..என்ன செய்வது!

  9. அப்துல் குத்தூஸ் Avatar
    அப்துல் குத்தூஸ்

    வெளிநாடு வேலைக்கு போகிறவர்களுக்காண மெடிக்கல் டெஸ்டில் இப்படித்தான் பாடாய் படுத்துவாங்க. அது இப்ப உள்ளுர்லயும் ஆரம்பிச்சிட்டாங்களா?

  10. selvanayaki Avatar
    selvanayaki

    பாமாவின் “கருக்கு” பற்றிய மதிப்பீடுகளையும், பாராட்டுக்களையும் மட்டுமே படித்திருந்தேன். அவரின் நூலை முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு நீங்கள் தந்த இணைப்பால் கிடைத்தது. நன்றி.

  11. ஆஹா டிராபிக் போலிஸ்கிட்டருந்து தப்பிக்க இப்படி கூட வழி இருக்கா

  12. கருக்கு நூல் தந்ததற்கு நன்றி.

    மெடிக்கல் செக்கப்பில் அம்மணக்கட்டையாக செக் செய்வார்கள் என்று பயமுறுத்தியதால் ஒரு காலத்தில் ஹெல்த் இன்சூரன்ஸே எடுக்காமல் இருந்திருக்கிறேன். உங்களுக்கு எப்படி செக் செய்தார்கள் என்று மேல் விவரங்களை சொல்லவும்.

    இந்த போலிஸ் – ஹெல்மெட் விளையாட்டு எரிச்சலாக இருக்கிறது. ஹெல்மெட் போடாத ஃபிகர்களை மட்டும் சல்யூட் அடித்து போலிஸ்காரர்கள் அனுப்பி வைக்கிறார்கள். நம்ம டவுசரை தான் அவுக்கிறார்கள்.

  13. ஆசிப் மீரான் Avatar
    ஆசிப் மீரான்

    தலை

    வேலைச்சேரி எங்க இருக்கு? 🙂 புதுசா வேலைக்குப் போறவங்க சேர்ற இடம் ஒரு வேளை வேலைசேரியோ? 🙂

    ‘ப்ரெஸ்’ன்னு பொய் சொல்லி தப்பிக்கிறது ஒரு பக்க இருக்கட்டும். அந்த காவல்காரர் கொஞ்சம் பயந்தவர் போல இருக்கு. இல்லேன்னா, ‘ப்ரெஸ்ன்னா பெரிய *****டா’ன்னு கேட்டு வாய் சிவக்க வச்சுடப் போறாரு. தலை, நீங்க வாய் சிவந்தா எங்கலூக்குக் கவலை ஒண்ணும் இல்ல. ஆனா, இப்ப இருக்குற பூச்சாண்டி முகம் இன்னும் மோசமாயிடுமே, பக்கத்து வூட்டுப் புள்ளைங்க எல்லாம் பயப்படுமேன்னு பொது நலத்தோட சொல்றேன் 🙂

  14. அரிசியில் கல் மாதிரி எழுத்து பிழைகள். எங்களுக்கு நல்ல சோறு வேணும், அதனால நல்லா களைஞ்சு எடுத்துக்கிறோம். பரவாயில்லை

  15. கொழுவி Avatar
    கொழுவி

    மேல் விவரங்களை சொல்லவும்.//

    லக்கி… மேல் விபரங்களை அவர் சொல்லி விட்டார். கீழ் விபரங்களைத்தான் எதிர்பார்க்கிறோம்.

  16. //லக்கி… மேல் விபரங்களை அவர் சொல்லி விட்டார். கீழ் விபரங்களைத்தான் எதிர்பார்க்கிறோம்.//

    கொழுவி சார்! பாக்யராஜ் எடுக்குற புதுப்படத்துக்கு டயலாக் எழுதணுமாம். வர்றீயளா? 🙂

  17. தூயா Avatar
    தூயா

    //
    . பின் காதருகில் வந்து சார் நீங்க பிரஸ்ஸா? என்று கேட்க, நாங்களும் ஆமாம் என்று தலையசைக்க.. ‘சாரி சார்.. நீங்க கெளம்புங்க’
    //

    என்ன ஒரு வில்லத்தனம் 😉 கிகிகிகி

  18. சில மாதங்களுக்கு முன்னால் நான் தொடர் காய்ச்சல் ஒன்றுக்காக, நம்ம ஊர் பிரபல தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருந்தேன். எனது அறைக்கு மருத்துவரும் அவரது சக பாடிகளும் வந்து பார்த்தபொழுது அவர் கேட்ட கேள்விகள் …
    ” தம்பி. தம் அடிப்பீங்களா ? ”
    “இல்லைங்க டாக்டர்”
    ” அப்புறம் தம்பி, தண்ணி அடிக்கிற பழக்கம் ஏதும் இல்லையே ??”
    “ம்ம்..ஹூம் …இல்ல..” ( அவர் கேட்ட தொனிய பார்த்தால், டாஸ்மாக் வாசலிலேயே குடி இருக்கும் நபர் கூட இல்லவே இல்லை என்று தான் கூற முடியும்)’
    இந்த கேள்வி எல்லாம் என்னிடம் கேட்க பட்ட பொழுது, எனது அறையில் மொத்தம் ஆறு அல்லது ஏழு பார்வை யாளர்கள் – எனது அம்மா அப்பா உட்பட.

    இந்த பழக்கங்கள் எல்லாம் சமூக குற்றங்களாக பார்க்கப்படும் நமது சமுதாயத்தில், இத்தகைய கேள்விகளை எத்தகைய சூழலில் கேட்கவேண்டும் – உண்மையான பதில் வேண்டும் எனில் – என்ற பொது அறிவு இல்லாமையை கண்டு எரிச்சல் அடைந்த நான், சில மணி துளிகளுக்கு பின் அவரது அறைக்கு சென்று உண்மையை கூறி வந்தேன் .

    பல நாடுகளில் (ஐரோப்பா , அமெரிக்கா ) நீங்கள் சம்மதித்தால் தான் உங்களது பெற்றோரோ அல்லது துனைவியரோ கூட உங்களது நோய் பற்றிய விவரங்களை மருத்துவரிடம் இருந்து தெரிந்து கொள்ள முடியும் !!! இதை ஒரு தகவலுக்கு தான் சொல்லுகிறேனே ஒழிய ‘உலகத்திலேயே மருத்துவ தொழிலை முறைபடுத்தாமல் இருக்கும் மிக பெரிய முதலாளித்துவ நாட்டில் இது போன்றவற்றை எதிர்பார்க்கிறேன் என்ற அர்த்தத்தில் அல்ல ( நம்ம என்ன எழுதினாலும் கொதித்து எழுந்து பினூட்டம் இடும் அனானிகளுக்கு விளக்கம் அளிக்க நேரம் இல்லாததால் )

    //ஹெல்மெட் போடாத ஃபிகர்களை மட்டும் சல்யூட் அடித்து போலிஸ்காரர்கள் அனுப்பி வைக்கிறார்கள்//
    அவுங்களும் ஹெல்மட் போட்டா, ரோட்டுல வண்டி ஒட்டுற நமக்கு போர் அடிக்காதா , லக்கி ?

    அப்புறம் ..பாலா சார், உங்க பதிவு அருமை.

  19. ஜேபி சார்,

    மற்றுமொரு கேள்வியும் உண்டு 🙂 🙂 🙂 நல்ல வேலை அதை கேட்கவில்லை 🙂 🙂 தப்பித்தீர்கள்

    பொதுவாக நான் இது போன்ற கேள்விகள கேட்க வேண்டியிருந்தால் உடலை சோதிப்பது போல் போக்கு காட்டி உறவினர்களையும், எதையாவது (இரத்த அழுத்த கருவி, வெப்பமானி) எடுத்த வர செவிலியர்களையும் அனுப்பி விட்டு தான் கேட்பேன்


    எதோ ஒன்றை கேட்க உறவினர்களை வெளியில் அனுப்பினால் நான் போன பிறகு அந்த அப்பாவியை ”நாங்க போன பின்னர் மருத்துவர் என்ன கேட்டார்” என்று துளைத்து எடுத்து விடுவார்கள் என்பது என் அனுபவம்

    தற்பொழுது படித்து வரும் இளம் மருத்துவர்களுக்கு பேச்சு திறமை இல்லை என்று என் போன்ற ”கிழடுகள்” புலம்புவது உண்மை என்றே தோன்றுகிறது 🙁

  20. புருனோ சார்,

    //மற்றுமொரு கேள்வியும் உண்டு 🙂 🙂 🙂 நல்ல வேலை அதை கேட்கவில்லை 🙂 🙂 தப்பித்தீர்கள்//

    எனது வயதையும், பேச்சையும் வைத்து அவர்களாகவே “No” என்று நினைத்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன். பாவம் அப்பாவி டாக்டர் !!!

    //எதோ ஒன்றை கேட்க உறவினர்களை வெளியில் அனுப்பினால் நான் போன பிறகு அந்த அப்பாவியை ”நாங்க போன பின்னர் மருத்துவர் என்ன கேட்டார்” என்று துளைத்து எடுத்து விடுவார்கள் என்பது என் அனுபவம்//

    நீங்க வேற…மருத்துவர் ” ஹவ் ஆர் யு பீலிங் , நவ்?” என்று எங்க அம்மா இருக்கும் பொழுது ஆங்கிலத்தில் கேட்டார். அவர் போன பிறகு எங்க அம்மா “அவரு இங்கிலீஸ்ல உண்ட என்னப்பா சொன்னாரு’ னு துளைத்து எடுத்து விட்டார் …. நீங்க சொல்லுறது மிகவும் சரி..

    நீங்க சொல்வது சரியே. அவர்களுக்கு போதிய அனுபவம் கிடையாது. எனது வேலையில் நான் பலமுறை எங்களது வாடிக்கையாளர்களை சந்திக்க நேரிடும். அதற்காக ‘customer support professionalism’ என்னும் பயிற்சிக்கு சென்றேன். அங்கு வாடிக்கையாளர்களிடம் எப்படி பேச வேண்டும், அவர்களின் தேவையை எப்படி அணுக வேண்டும், ஏதேனும் பிரச்சனைகள் வரும் பொழுது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றெல்லாம் சொல்லி தரப்பட்டது. இது போல், தங்களது படிப்பிலோ, அல்லது வேலை பார்க்கும் மருத்துவ மனைகளிலோ ஏதேனும் சொல்லிதர படுகிறதா ( அதாவது நோயாளியிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று ) என்று சொல்லவும்.

    மற்றொரு முறை ஒரு மருத்துவரை பார்க்க நேர்ந்தது. அவரிடம் நான் ஏதேனும் உணவு கட்டுப்பாடு தேவையா என்று கேட்டதற்கு, சில உணவு வகைகளை கூறிய பின் ” தண்ணி அடிக்காதீங்க. அது நான் எல்லோரிடமும் சொல்லுறது தான்” என்று கூறினார். நான் அவரை பார்க்க போனது கால் வலிக்கு. நான் உணவு கட்டுபாட்டை பற்றி கேட்டது, அவர் கொடுத்த மருந்தை உட்கொள்ளும் பொழுது அதற்கேற்ற உணவை உட்கொள்வதார்க்காக.
    அதை அவரிடம் விளக்கிய பின் “நீங்க என்ன வேணாலும் சாப்ட்டு இந்த டேப்லட்ட போட்டுக்கங்க”. அதே சமயம் பல சிறப்பான ஆளுமை திறன்களை கொண்ட மருத்துவர்களையும் பார்த்திருக்கிறேன் என்பதையும் சொல்லி விடுகிறேன்.

  21. //இது போல், தங்களது படிப்பிலோ, அல்லது வேலை பார்க்கும் மருத்துவ மனைகளிலோ ஏதேனும் சொல்லிதர படுகிறதா ( அதாவது நோயாளியிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று ) என்று சொல்லவும்.//

    இல்லை 🙁 🙁

    இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

    புத்தகங்களை படித்தால் மட்டும் போதும் என்ற தவறான கருத்து பரவி வருவதுதான் வேதனை அளிக்கும் விஷயம்

Leave a Reply to லக்கிலுக் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *