நன்றி நவிலல்- ஆட்டிசம் : சில புரிதல்கள் வெளியீட்டு விழா

பாரதி பதிப்பகம் தோழர் நாகராசனுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, எத்தனை பேரு வருவாங்கன்னு தெரியுமா தோழர்? சேர் எல்லாம் போட்டு வைக்கனும்னு’ கேட்டார்.

சுமார் 75ல இருந்து 100 பேர் வருவாங்கன்னு நினைக்கிறேன் என்றேன்.

என்னது அம்புட்டுப்பேரா.. என்ன விளையாடுறீங்களா? அழைப்பிதழ் கூட அச்சடிக்கலை. மெயில்வழியாகவும், பேஸ்புக் வழியாகவும் தான் கொடுத்திருக்கோம்.. அத்தனை பேர் வர்றதுக்கு இது இலக்கிய நூலும் இல்லையே?  என்றார் தீராசந்தேகத்துடன்.

நான் நம்பிக்கையாகச்சொன்னேன். இல்லைதோழர்.. நான் எதிர்பார்க்கிற அளவுக்கு ஆட்கள் வருவாங்க என்று!  எங்கள் பகுதியில் இருந்த அபிராமி கேட்டரிங்கில் காபி, போண்டா, ஜாங்கிரி என்று நூறு பேருக்கு சொல்லியும் வைத்திருந்தேன்.

உள்ளுக்குள் ஒரு உதறல் இருந்துகொண்டே இருந்தது. ஆட்டிசக்குழந்தைகளும், அவர்தம் பெற்றோருமாக ஒரு இருபது பேர், அலுவலக நண்பர்கள் ஒரு ஐந்துபேர், பேஸ்புக், ப்ளஸ் என பதிவுலகில் இருந்து பத்துபேர், பதிப்பகம் சார்பில் ஒரு பத்துபேர் என அப்படி இப்படிமாய் சுமார் ஐம்பதுபேர் வந்துவிடுவார்கள் என்று திடமாக நம்பிக்கொண்டிருந்தேன்.

30.03.2013  நூல் வெளியீட்டு விழா அன்று எதிர்ப்பார்ப்புகளை ஈடுசெய்தனர் நண்பர்கள். ஆம்.. அநேக இலக்கியவாதிகள் சொல்லுவதுபோல், கிளிஷே வசனமாக.. உள்ளே இடம் போதாமையால் பலரும் வெளியே நின்றுகொண்டிருந்தார்கள் என்பதை அறிந்தபோது, உண்மையில் மிகுந்த சந்தோசம் ஏற்பட்டது.

மருத்துவர் தேவகி

இவ்விழாவில் டாக்டர்.தேவகி அவர்கள் மருத்துவராக மட்டுமல்ல, ஓர் ஆட்டிசக்குழந்தையின் தாயாகவும் மனம் திறந்து பேசியது பலரையும் பாதித்ததாகச்சொன்னார்கள்.

இயக்குனர் குமாரவேலன்

அடுத்து, ஹரிதாஸ் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் – இந்த நூல் ஆட்டிசக்குழந்தைகளை மட்டுமே மையப்படுத்தி ஹரிதாஸ் பாகம் 2 எடுக்கவேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தி இருப்பதாகக்கூறினார்.

இசைக்கவி இரமணன்

வரமுடியுமா என்று பார்க்கிறேன் என்று சொன்ன, ஐயா இசைக்கவி இரமணன் வந்திருந்து, ஒர் அற்புதமான பாடலையும் பாடிச்சென்றார்.  மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த தருணம்.

தோழர் டி.கே.ஆர்

வாழ்த்துரைக்கு வந்திருந்த சிபிஎம் கட்சியின் எம்.பி. தோழர் டி.கே.ரங்கராஜன் இந்நூல் இதே எளிமையுடன் இந்தியிலும் கொண்டுவர முயற்சி எடுப்பதாகத்தெரிவித்தார். அதோடு, மத்திய அரசு என்ன செய்துள்ளது என்பதுபற்றியும் அவர் கேள்வி எழுப்ப, மீண்டும் வாய்ப்பு கேட்டு, டாக்டர் தேவகி அதற்கு பதில் சொல்ல, ஆட்டிசக்குழந்தைகளின் நலன் குறித்த உண்மையான அக்கரை உள்ளவர்கள் கூடிய இடமாகிப்போனது அந்த அரங்கம் என்பது நெகிழ்வான தருணம்.

விழாவினை மிக அழகாக தொகுத்துவழங்கி, அசத்தினார் அருமை அண்ணன் ஆஸாத் அவர்கள்.

விழா நடந்த அன்று மட்டுமே நூற்றுக்கும் அதிகமான நூல்கள் விற்பனை ஆனதாக பாரதிபுத்தகாலயத்தின் தோழர் சிராஜூதின் சொன்னபோது, பலருக்கும் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வுக்கு விதை விதைத்திருக்கிறோம் என்று ரொம்பவுமே சந்தோசப்பட்டேன்.

எதிராபாரத அளவு இவ்வளவு சிறப்பாக நடந்த விழாவுக்கு காரணம் நண்பர்கள் தான் என்றால் அது மிகையல்ல!
ஆட்டிசம் நூலிற்கு வெளியீட்டு விழாவைக்கலாம் என்ற எண்ணம் வந்த உடனேயே, பண்புடன் குழுமத்தின் மூலம் அறிமுகமான சில நண்பர்களுக்கு தனிமடலில் தன்னார்வலர்களாக உதவிடமுடியுமா என்று கோரிக்கை வைத்தேன்.

நரேஷும், ப்ரியனும்

என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள் என்று பதில் வந்தது. பபிள்ஸ் என்னும் சோப்பு நுரையை ஊதிக்காட்டுவது, முகமுடிகள் மாட்டிக்கொண்டு திரிவது, க்ரையான்ஸ் சார்ட் பேப்பர் சகிதம் குழந்தைகள் வரைய இடம் ஒதுக்குவது, குதித்து விளையாட என ஏற்பாடு செய்யவிருக்கும் ஏர்பலூன்களில் குழந்தைகளை பார்த்துக்கொள்வது- எல்லாவற்றிலும் குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னதும் ஒட்டுமொத்தமாக சரி என்று பதில் வந்தது. அதன் பின், அம்மடல் சங்கிலியிலேயே யார் யார் என்னென்ன பொருட்களுக்கு பொறுப்பு ஏற்பது என்பது குறித்து விவாதித்தோம். அவரவர் பங்கிற்கு பபிள்ஸ் வாங்கிவருவது தொடங்கி, முகமுடிகள், சார்ட் பேர்ப்பர், க்ரையான்ஸ், பஸில்ஸ் என சில பொறுப்புக்களை அவர்களே ஏற்றுக்கொண்டார்கள். முகமுடிகளை தம்பி தமிழ் வாங்கிக்கொடுத்தார். (இதுவரை அவற்றிற்காக செலவு செய்த தொகையை, கேட்டும் அவர்கள் எவரிடமிருந்தும் இன்று வரை பதில் இல்லை.)

நல்லாயர் உதயன்

மதியம் மூன்று மணிக்கே அரங்கத்திற்கு வந்து சேர்ந்து, எனக்கு தொலைபேசினார்கள் பண்புடன் குழும உதயனும், வில்லனும். அதன் பின் நானும் நரேஷும் போய்ச்சேர்ந்தோம். கொஞ்ச நேரத்தில் ப்ரியன் பலூன், பபிள்ஸ் சகிதம் வந்து சேர்ந்தார். எல்லோருமாக சேர்ந்து, பலூன் ஊதி, கட்டத்தொடங்கினோம். நரேஷின் மருமகன் 14வயது பவித்திரனும் பம்பரமாக சுழன்று பணியாற்றினார். பலூன்களை ஊதி, நூலில் கட்டிக்கொண்டிருந்த போது, ஆசிப் அண்ணாச்சி வந்து சேர்ந்தார். அவரும் எங்களுடன் சேர்ந்து, பலூன் ஊதுவது, கட்டுவது என்று பிஸியாகிப்போனார்.

வில்லன்

சிறுவர்கள் விளையாடுவதற்கு சொல்லி இருந்த ஏர்பலூன் ஆட்கள் வந்து சேராதது இன்னும் டென்சனை அதிகப்படுத்தியது. இதற்கிடையில் குடிக்க தண்ணீர் கேன், குழந்தைகள் படம் வரையும் இடத்தில் விரிக்க ஜமக்காலம் எதும் தயாராக இல்லை. கடைசி நிமிடத்தில் அதனை பறந்து பறந்து முடித்துக்கொடுத்தார் நரேஷ்.

ஒளிப்பதிவர் தேவராஜ்
அனீஷ், செல்லவக்குமார் அண்ணன்

என்னோடு பணிபுரியும் ஐந்து கேமராமேன்கள் அவர்களாகவே வந்து விழாவினை வீடியோ எடுத்துக்கொடுத்தார்கள்.

அதே போல, அண்ணன் செல்வக்குமார், தம்பி அனீஷ் ஆகியோர் வந்திருந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்துகொண்டிருந்தனர். அனீஷ் கூடுதல் நாற்காலிகளை ஒழுங்கபடுத்திக்கொண்டிருந்தார். அலுவலகத்தில் ட்ரைனியாக இருக்கும் சில தோழியரும் வந்து, தங்களால் இயன்ற உதவியை செய்துகொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் நன்றி!

நுனிப்புல் உஷாக்கா, அலைகள் அக்கா அருணா ஸ்ரீனிவாசன் போன்ற பழம்பெரும் பதிவர்கள் வந்து எட்டிப்பார்த்த போது, எல்லோரும் பலூன் ஊதிக்கொண்டிருந்தோம். கொஞ்ச நேரம் ஆசிப் அண்ணாச்சி அவர்களுடன் பேசினார். ஒரு ரவுண்டு போய்விட்டு வருவதாக சொல்லிச்சென்றனர்.

கணேஷ்

ஆஸாத் அண்ணன் குடும்பத்துடன் வந்திறங்கிய சிறிது நேரத்தில் எல்லாம் ஆட்கள் வரத்தொடங்கிய தருணத்தில் தான் ஏர்பலூன் காரர்கள் வந்து சேர்ந்தார்கள். அப்போது தொடங்கி, அவர்கள் விழா முடிந்து போகும் வரை கூடவே இருந்து, அதில் விளையாடும் குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார் வில்லன். கடுமையான பணி. வியர்த்து களைத்துப்போய் காணப்பட்டார். இவ்விழாவிற்காகவே பெங்களூருவில் இருந்து, வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப்போலவே தூத்துகுடியில் இருந்து பண்புடன் குழுமத்தில் உள்ள ஐயா துரை.ந.உ அவர்களின் இவ்விழாவுக்கான பிரத்தேக வருகையையும் குறிப்பிட்டு சொல்லவேண்டும். இந்த மாதிரியான அன்பானவர்கள் இருப்பதால் தைரியமாக இன்னும் பல விழாக்களை நடத்திவிட முடியும்.

தம்பி அப்துல்லா

தம்பி அப்துல்லா குடும்பத்துடன் காரில் வந்து இறங்க, அதன் பின்னாடியே ஹார்ன் அடித்தபடி வந்து நின்றது ஒரு கார். யாரது என்று பார்த்தால் குடும்பத்துடன் அண்ணன் நைஜிரீயா ராகவன் ஆஜர்.தொடர்ச்சியாக ஆட்கள் வரத்தொடங்கியதும், கொஞ்சம் ஆசுவாசப்பட்டேன். லோட்டஸ் ஃபவுண்டேஷன் அமைப்பாளர்களான நந்தினி, விஜய், மியூசிக் தெரப்பிஸ்ட் லக்ஷ்மி மோகன் என இத்துறையில் சேவையாற்றி வரும் பலரும் வந்து சேர்ந்தனர். லோட்டஸ் மூலம் அறிமுகமான பல ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்களும் குடும்ப சகிதம் வந்து சேர்ந்தனர்.

டாக்டர் தேவகி, எம்.பி உட்பட எல்லோரும் வந்துவிட, இயக்குனர் வர கொஞ்சம் தாமதமாகிப்போனது. 4.30மணிக்கு என்று திட்டமிருந்தோம். ஆனால்.. இருபது நிமிடங்கள் தாமதமாக 4.50க்கு ஆட்டிசக்குழந்தை கணேஷ் பாடிய இறைவணக்கத்துடன் விழா தொடங்கியது. வரவேற்புரையாக அன்னை சிறப்பு பள்ளி ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டிருக்கும் போதே இயக்குனர் வந்து சேர்ந்தார்.

சச்சின்

திட்டமிட்டபடி ஆறுமணிக்கு முடிக்கவேண்டிய நிகழ்ச்சி, தொடக்கத்தில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக 6.20க்கு ஆட்டிசக்குழந்தை சச்சின் பாடிய தேசிய கீதத்துடன் இனிதே முடிந்தது.

அச்சு, பவி, நரேஷ்- ஓய்வான சமயத்தில்..

இந்த ஒன்னரை மணி நேரமும் வெளியே உள்ளே என குழந்தைகள் வந்து போய்க்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தார்கள். பண்புடன் குழும நண்பர்கள் உதயன், வில்லன், பிரியன், அச்சு, நரேஷ், நந்தா, இவர்களின் மருமகனார் பவித்திரன் இன்னும் பல பண்புடன் நண்பர்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொண்டார்கள். வாசல் கேட் பக்கம் ஒரு குழந்தையும் வெளியே போய்விடாமல் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்துக்கொண்டே குழந்தைகளையும் மகிழ்வித்துக்கொண்டிருந்தார்கள். அதனால்.. பெற்றோர் நிம்மதியாக விழாவில் கலந்துகொள்ள முடிந்தது.

எவர் பெயரையாவது குறிப்பிட மறந்திருக்கலாம். அவர்கள் மன்னிக்க!

ஆசிப் அண்ணாச்சி அதிகமான நூல்களை வாங்கிச்சென்றார்.

எந்த அமைப்பும் இல்லாமல் இந்த நூல் வெளியீட்டு விழாவை தனி நபராய்  இவ்வளவு சிறப்பாக நடத்தியதாக சிலர் சொன்ன போது நான் சொன்னேன். தனியாக நடத்தலை. இது பண்புடன் குழும நண்பர்கள் நடத்திக்கொடுத்த விழா என்று. அது தான் உண்மையும் கூட!

நண்பர்களுடன்… எல்லா படங்களையும் எடுத்தவர் நந்தா

எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்! நன்றி நண்பர்களே!!

++++++++++

 

புகைப்பட ஆல்பத்திற்கு இங்கே சொடுக்கவும்: ஆட்டிசம் சில புரிதல்கள் வெளியீட்டு விழா புகைப்படத்தொகுப்பு


Comments

5 responses to “நன்றி நவிலல்- ஆட்டிசம் : சில புரிதல்கள் வெளியீட்டு விழா”

  1. vasudevan Avatar
    vasudevan

    வியக்க வைத்த கமிட்மெண்ட். அனைவருக்கும் வாழ்த்துகள்!

  2. வாழ்த்துகள், பாராட்டுகள். விரைவில் ஒரு புத்தகம் வாங்கி விடுவேன்.

  3. விழாவை அருமையாக மிக அருமையாக தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்… நன்றிகள் பல…

  4. ORB.Raja Avatar
    ORB.Raja

    பாலா, நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு புத்தக வெளியீடு. அக்காள் மகன் திருமணம் காரணமாக கலந்துகொள்ள இயலவில்லை 🙁
    விழா சிறப்புற நடந்தேறியது குறித்து மகிழ்ச்சி. நேரில் சந்திக்கும்போது புத்தகங்கள் வாங்கிக்கொள்கிறேன்.

  5. ஜோசப் பால்ராஜ் Avatar
    ஜோசப் பால்ராஜ்

    இணையக் குழுன்னா சும்மா இல்லடான்னு நிருபிச்ச இன்னுமொரு நிகழ்வு.

    வாழ்த்துக்கள் அண்ணா.

Leave a Reply to vasudevan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *